குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு Pt web
தமிழ்நாடு

வேலூர் தங்கக் கோவில் | கருவறைக்குள் சென்று ஜானாதிபதி திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட தியான மண்டபத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைத்தார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

PT WEB

வேலூர் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி தங்கக் கோயிலில் புதியதாக தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்துவைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை 11 மணிக்கு வேலூர் திருப்பதியில் இருந்து 3 இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தங்ககோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடிற்கு வருகை தந்தார். அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் வரவேற்றனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

பின்னர், தங்க கோவிலுக்கு சென்ற அவர் பேட்டரி காரில் சுற்றிப்பார்த்து கோவில் வளாகத்தில் 1700 கிலோ வெள்ளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் விநாயகர், 70 கிலோ தங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகாலட்சுமி மற்றும் சீனிவாசா பெருமாளை தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசிக்க சக்தி அம்மா, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-வை கோவில் கருவறை வரை அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தார். பின்னர், மதியம் 1 மணி அளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வேலூர், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் 1700 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், இந்தப் பகுதிகள் 'RED ZONE' என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிரோன்கள் பறக்கத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.