திரௌபதி முர்மு ஒப்புதல் pt desk
தமிழ்நாடு

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். உமீத் என பெயரிடப்பட்டுள்ள புதிய சட்டம் விரைவில் அரசாணையாக வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

PT WEB

செய்தியாளர்: கணபதி சுப்ரமணியம்

மத்திய அரசு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒரு மசோதாவும், முசல்மான் வக்ஃப் சட்டத்தை ரத்து செய்ய இன்னொரு மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து வக்ஃப் சட்டத் திருத்தங்களுக்கு கடந்த வியாழக்கிழமை மக்களவையிலும், வெள்ளிக்கிழமை மாநிலங்களவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை மத்திய அரசு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா

இதையடுத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையுடன் இரண்டு மசோதாக்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புதிய சட்டத்துக்கு ஒப்பதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற சட்டம் விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

வக்ஃப் சட்டத்துக்கு நம்பிக்கை என பொருள்படும் வகையில் உமீத் என்ற சுருக்க பெயர் சூட்டப்பட்டுள்ளது மேலும் முசல்மான் வக்ஃப் சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவும் நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று இருப்பதால், அந்த சட்டம் இனி நடைமுறையில் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்