தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், ஏப்ரல் 29-ம் தேதிக்குப் பிறகு வெளியாகி வரும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக கூறிவருகின்றன. மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார்? என்ற கேள்விக்கு அன்றைய தினமே பதில் கிடைக்கப்பெறும்.
திமுக கூட்டணியில் 2-வது அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்ட கட்சியாக தேமுதிக இருக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த நிலையில், திமுக கூட்டணியில் சேர்ந்த தேமுதிகவுக்கு 10 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. எனினும், ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கியிருந்தது அந்த சமயத்தில் பேசுபொருளாகியிருந்தது. தேமுதிக மீதான பல விமர்சனங்களுக்கு பிறகு, தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கு வேளையில், இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு காக்கி சட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், ”ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் குறித்து அதீத எதிர்பார்ப்புகள் தேவையில்லை. எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து, தொங்கு சட்டசபை ஏற்படும் பட்சத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரலை திமுகவிடம் எழுப்புவீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ”தேர்தல் களத்தில் அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம். இந்த கேள்விக்கு வரும் 4ஆம் தேதி பிறகு பதில் அளிக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய பிரேமலதா, தேமுதிகவின் 10 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வார்கள் என தெரிவித்திருக்கிறார்.