விஜய் - விஜயகாந்த் web
தமிழ்நாடு

”ஒரு நாளும் யாரும் விஜயகாந்தாக மாறிவிட முடியாது” - விஜய்-க்கு பிரேமலதா மறைமுக பதிலடி

நடந்து முடிந்த தவெக மாநாட்டில், தவெக தலைவர் விஜய், மறைந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் பற்றி பேசியது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரையில் நடந்து முடிந்து இருக்கிறது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பேசி இருந்தார்.

premalatha vijayakanth

மாநாட்டில், “மதுரைன்னாலே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும், அழகர் திருவிழாவும், மீனாட்சியம்மனும் நினைவுக்கு வருவாங்க. ஆனால் மாநாட்டுக்காக இந்த மண்ணுக்கு வந்தவுடன், எனக்கு மனசுக்குள் ஓடியது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிதான்; ஆனால் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், அவரைப்போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன், புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு நிறையவே கிடைத்தது. மதுரை மண்ணை சேர்ந்த அவரை மறக்க முடியுமா?” என கேப்டன் விஜயகாந்த் பெயரை விஜய் குறிப்பிட்டவுடன் மதுரை மாநாடே சத்தத்தில் அதிர்ந்தது.

இந்த நிலையில், விஜயகாந்த் பற்றி விஜய் பேசியிருப்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “விஜயகாந்த்திற்கு நிகர் என்றுமே அவர்தான். அன்பின் வெளிப்பாடாக அண்ணனாக நினைத்து தான் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் விஜயகாந்த் குறித்துப் பேசினார் . விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜய்காந்த்துடன் 17 திரைப்படங்கள் பண்ணியிருக்கார். இன்றைக்குதான் விஜய் உங்களுக்கெல்லாம் தெரியும். எங்களுக்கு விஜய் நடிகராவதற்கு முன்பிருந்து, அவரை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறோம். இதனை அரசியல் ரீதியாக தமிழக வெற்றி கழகத்தினர் அணுகும் பட்சத்தில் அது தவறானது. அவர்கள்தான் தங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு நாளும் யாரும் விஜயகாந்தாக மாறிவிட முடியாது. விஜயகாந்தின் வாக்குகளை விஜய் பிரிக்க நினைப்பதாக இருந்தால் மக்களும் ஏற்கமாட்டார்கள், தேமுதிகவினரும் பொருட்படுத்தமாட்டார்கள். மேலும், விஜயகாந்த் குறித்து விஜய் பேசியதாலேயே கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்றில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பதை அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கவுள்ள மிகப்பெரிய மாநாட்டிலேயே அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.