பிரேமலதா விஜயகாந்த் pt
தமிழ்நாடு

”ஜனநாயகன் படத்தை பார்த்து கண்ணீர் விடாமல்..” விமர்சித்த பிரேமலதா!

ஜனநாயகன் படத்தை பார்த்து தவெக அமைச்சர்கள் கண்ணீர் விட்டதை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

Rishan Vengai

சென்சார், நீதிமன்ற தடை, இணைய லீக் போன்ற சர்ச்சைகளை தாண்டி 7 மாதங்களுக்கு பின் வெளியான விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்து அமைச்சர்கள் கண்ணீர் விடும் வீடியோக்கள் வைரலாகும் நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் விமர்சனம் செய்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னை, நீதிமன்ற தடை, படம் இணையத்தில் லீக் என்பதை எல்லாம் கடந்து 7 மாதங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் படத்தை திரையரங்கில் பார்த்த தவெக அமைச்சர்கள் பலபேர் கண்ணீர்விட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

ஜனநாயகன்

இந்தசூழலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மக்கள் பிரதிநிதிகள் ஜனநாயகன் படத்தை பார்த்து கண்ணீர் விடாமல் மக்கள் பணியை செய்யுங்கள், ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருங்கள் என விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இது சினிமா இல்லை. தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்த டெண்டர்களும் விடப்படவில்லை, அடிப்படை பணிகளும் நிறைவேற்றவில்லை. ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருந்து மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

டாஸ்மாக் கடை ஒரு பக்கம் மூடப்பட்டாலும் மற்றொரு பக்கம் கடை திறக்கப்படுகிறது ஆட்சி வந்த பிறகு காவல் மரணங்கள் அதிகரிக்கிறது, குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாம். ஆனால் அடித்து உயிரைக் கொல்ல அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது.

திரைப்படம் பார்த்து அழுது கொண்டிருப்பதை விட மக்களுக்கு பணி செய்யுங்கள். நீட் தேர்வு விவகாரத்தில் மக்கள் விரும்பாததை மத்திய மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது மன்னிப்பாவது கேட்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.