pregnant lady
pregnant lady file image
தமிழ்நாடு

சேலம்: கர்ப்பிணி மனைவியை கைவிட்ட கணவன்.. வீட்டு வாசலிலேயே 86 நாளாக போராடும் இளம்பெண்!

யுவபுருஷ்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வேலக்கவுண்டனூரை சேர்ந்த மோகன்ராஜ், சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும், பி.எஸ்சி மயக்கவியல் படித்த பவித்ரா என்ற பெண்ணை கடந்த பத்தாண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மே மாதம், பவித்ராவை காஞ்சிபுரம் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார் மோகன்ராஜ்.

சென்னையில் ஐந்து மாதமாக வசித்து வந்த நிலையில், மோகன்ராஜின் சகோதரி சவுமியாவுக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக, சொந்த ஊரான வேலகவுண்டனூருக்கு வந்துள்ளார். வந்ததில் இருந்து மனைவி பவித்ராவிடம் இருந்து தள்ளியே இருந்துள்ளார். முன்னதாகவே, மூன்று மாத கர்ப்பமாக இருந்த பவித்ரா, வேலாக்கவுண்டனூரில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவரின் பெற்றோர் முருகன், சாராதா மற்றும் உறவினர்கள் அவரை பார்க்க அனுமதிக்காமல் வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.

இதையடுத்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பவித்ரா கடந்த ஜூலை 22-ம் தேதி புகார் கொடுத்தார். ஒரு மாதமாக விசாரித்தும் மோகன்ராஜை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து தனது காதல் கணவரை கண்டுபிடித்து சேர்த்து வைக்ககோரி, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தை துவக்கினார்.

அதனால், வீட்டை பூட்டிவிட்டு வெளியேறிய கணவர் குடும்பத்தார், இதுவரை வீட்டிற்கு வராமல் உள்ளனர். ஆனால், 86-வது நாளாக கர்ப்பிணி பெண் கணவரின் வீட்டு வாசலிலேயே வசித்துக்கொண்டு தனது கணவரை சேர்த்து வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அமர்ந்துள்ளார். இதனையடுத்து, வரதட்சனை கேட்டு மனைவியை விரட்டிய வழக்கில் கணவர் மோகன்ராஜ் நீதிமன்றத்தில் சரணடைந்து தற்போது சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.