பிரகாஷ் ராஜ் - விஜய் pt / cmo
தமிழ்நாடு

“விஜய் மீது பல்வேறு சந்தேகங்கள் எனக்கு உள்ளது..” - பிரகாஷ் ராஜ்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், திமுக தலைவர் ஸ்டாலினின் தோல்வி குறித்து ஆராய வேண்டும் எனவும் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

PT WEB

விஜய் மீது பல சந்தேகங்கள் இருப்பதாகவும், தேர்தலுக்கு முன்பே அதை கூறியதாகவும் பிரகாஷ் ராஜ் விளக்கினார். ஆனால் மக்கள் மாற்றம் விரும்பி அவரை தேர்வு செய்ததால், ஓராண்டு வரை காத்திருந்து பின்னர் ஆட்சியை விமர்சிக்கலாம் என்றார்.

திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “விஜய் ஆட்சிக்கு வந்து 120 நாட்கள் தான் ஆகியுள்ளது. மக்கள் மாற்றம் வேண்டும் என வாக்களித்து உள்ளார்கள். வாக்களித்தவருக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் அவர்தான் முதலமைச்சர். இன்னும் அவருக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அவருடைய ஆட்சி குறித்து கருத்து சொல்ல இன்னும் ஓராண்டு நேரம் கொடுக்க வேண்டும்.

எல்லா ஆட்சிகளிலும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவார்கள். அது போல தான் இந்த ஆட்சியிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

MK Stalin

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்தாரா? தோற்கடிக்கப்பட்டாரா? அல்லது எஸ்.ஐ.ஆர் காரணமா?  என்பது குறித்து எல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். ஸ்டாலின் போன்ற ஒரு தலைவர் தோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சி தான்.

விஜய் வெளிநாடு சென்று அவருடைய நண்பர் அஜித்தை சந்தித்துள்ளர். அதில் எந்த தவறும் கிடையாது. அவர் எதற்காக சென்றாரோ அதை செய்தாரா?  என்பதை தான்  பார்க்க வேண்டும். பல்லாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த தேர்தலில் திமுக செயற்கையாக தோற்கடிக்கப்பட்டிருக்கலாம்.. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி வெற்றி பெறாது. ஆளுங்கட்சி தான் தோல்வியடையும். மக்கள் மாற்றம் வேண்டும் என வாக்களித்து உள்ளார்கள். அவர்களுக்கு ஒவ்வொன்றாக நாம் கற்றுத்தர தேவையில்லை. ஓராண்டு அவர்களுக்கு நேரம் கொடுத்து தான் ஆக வேண்டும்.

மத்திய அரசு வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது. அதனால் அவர்கள் அமைதியாகி விட்டார்கள். எஸ்.ஐ.ஆர் மூலம் 16 கோடி மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையரை கொண்டு வரவேக்கூடாது. அதை யார் ஆதரித்தாலும் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

கர்நாடக பிரச்சனை அவர்களுக்கு தமிழ்நாட்டு பிரச்சனை நமக்கு. காவிரி விவகாரத்தில் இருவரும் பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும்.

CM VIJAY

விஜய் மீது பல்வேறு சந்தேகங்கள் எனக்கு உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவும் அது குறித்து பேசி உள்ளேன். அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விட்டார்கள். தற்போது 120 நாட்கள் தான் ஆகியுள்ளது. தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. நாம் அவர்களுக்கு நேரம் கொடுத்து தான் ஆக வேண்டும். ஒரு வருடத்திற்கு பின்பும் சரியாக வேலை செய்யவில்லை என்றால் நான் கேள்வி கேட்பேன்.

நான் முதல் பட்ஜெட் வரை காத்திருக்கிறேன். உடனடியாக அவர்கள் மீது விமர்சனம் செய்ய தேவையில்லை. ஆட்சியாளர்களை பிடிக்கவில்லை என்பதற்காக நாம் உடனடியாக விமர்சனம் செய்ய தேவை இல்லை. ஜனநாயகத்தையும் மக்களையும் மதித்து நடக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.