தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தருமபுரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு-மத்திய வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தசூழலில் இன்று நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை. சிவகங்கை, தஞ்சை, மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர், திருச்சி, புதுவை மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால், மதுரை சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது.
அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் ராக்காச்சி அம்மன் கோயில் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் ஈரோடு, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சியிலும் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

