தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் PT Desk
தமிழ்நாடு

“இது நினைவில் இருக்கும்” - மிக்ஜாம் புயல் குறித்து பிரதீப் ஜான்

Angeshwar G

தெற்கு அந்தமான் வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது நவம்பர் 28ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது.

youtube thumbnail

நவம்பர் 30ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. டிசம்பர் 3ஆம் தேதி புயலாக வலுவடைந்த நிலையில், அதற்கு மிக்ஜாம் என பெயர் வைக்கப்பட்டது. புயல் உருவானதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. டிசம்பர் 4ஆம் தேதி புயலின் தீவிரம் காரணமாக விடாது பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்கடாக மாறின. நேற்று சென்னையில் மழையின் அளவு குறைந்த போதும் முதல் நாள் பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் நீர் குளம் போல் காட்சி அளித்தது. தொடர்ந்து தமிழகத்தில் மீட்புப் பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில் புயல் சென்னையை விட்டு விலகி தெற்கு ஆந்திரத்தின் பாபட்லா அருகே 100 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கனமழை சார்ந்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், “1976, 1985, 1996, 2005, 2015 மற்றும் 2023 - சென்னை ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்ட ஆண்டுகள் இவை. இதில் இந்தாண்டு (2023) மட்டும் சென்னையில் 2,000மிமீ மழை பெய்துள்ளது” என்றுள்ளார்

michaung cyclone

நேற்று மதியம் 3 மணியளவில் இதுகுறித்து பதிவிட்ட அவர், “கடந்த 48 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 469 மிமீ மழை (230 மிமீ மற்றும் 239 மிமீ) பெய்துள்ளது. இதில் பெரும்பாலான மழைப்பொழுவு ஞாயிறு இரவு முதல் திங்கள் இரவு வரை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் முழு நகரமும் 400 முதல் 500 மிமீ மழையைப் பெற்றுள்ளது.

ஆவடியில் மிக மோசமாக 564 மிமீ மழையும் (276 மிமீ மற்றும் 278 மிமீ), பூந்தமல்லியில் 483 மிமீ மழையும் (141 மற்றும் 342) பொழிந்துள்ளது. கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதற்கு இப்பகுதிகளில் பொழிந்த கனமழையே காரணம். தாம்பரத்தில் 409 மிமீ மழை (173 மிமீ மற்றும் 236 மிமீ) பொழிவின் காரணமாக அடையாறும் நிரம்பி வழிகிறது.

கொசஸ்தலையார் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பூண்டியில் இருந்து ஒரு கட்டத்தில் 45 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இணையம் மற்றும் மின்சாரம் திரும்பியதும் இந்த மழையின் அனைத்து வரலாற்று புள்ளிவிவரங்களையும் வெளியிட முயற்சிப்போம். மேலே குறிப்பிட்ட அனைத்து வருடங்களுடன் சேர்த்து, இந்த 2023 எல்லோருக்கும் நினைவில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.