மீண்டும் ஆளுநராக பதவியேற்றார் பொன்முடி
மீண்டும் ஆளுநராக பதவியேற்றார் பொன்முடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

மீண்டும் அமைச்சரானார் பொன்முடி - “ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” - முதலமைச்சர்

Angeshwar G

மீண்டும் அமைச்சரானார் பொன்முடி

சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அமைச்சரானார் பொன்முடி. இந்த பதவியேற்பு நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒருவர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, தண்டனை பெற்று, பதவி நீக்கமும் செய்யப்பட்டு, 4 மாதங்களுக்குள்ளாக மீண்டும் எம்.எல்.ஏ ஆகி அமைச்சரும் ஆகிறார் என்றால், அது பொன்முடிதான்.

பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்பு

பதவியேற்பு நிகழ்வு நடந்து முடிந்த உடன், விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக செல்கிறார் பொன்முடி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அமைச்சர்களுக்கு கிடைக்கும் கார் உள்ளிட்ட சலுகைகள் எல்லாம் தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்த பின்பே கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

“ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பதவியேற்கும் நிகழ்வு முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தை காப்பாற்றியதற்காக, மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் தண்டனை விதித்திருந்தது. இதனால் திருக்கோவிலூர் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி

இதனை அடுத்து ‘பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க வேண்டும்’ என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மார்ச் 13 ஆம் தேதி பரிந்துரை கடிதம் எழுதியிருந்தார். ஆனால், ஆளுநர் டெல்லி சென்றதால் பதவியேற்கும் நிகழ்வு தள்ளிப்போனது. ஆளுநர் மீண்டும் சென்னை திரும்பிய பின்னரே நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. சென்னை திரும்பிய ஆளுநர், அமைச்சராக பொன்முடியை பதவி பிரமாணம் செய்துவைக்க கடந்த 17-ம் தேதி மறுப்பு தெரிவித்தார்.

“உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது, குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை” என முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் எழுதி இருந்தார். இதனை அடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநரை கடுமையாக எச்சரித்திருந்தார்.

“தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உச்ச நீதிமன்றத்துடன் விளையாடுகிறாரா? உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படுகிறாரா? பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம்” என்று காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

பொன்முடி

இந்நிலையில் தமிழக அரசு எதிர்பார்த்தபடி ஆளுநர் மாளிகையில் இருந்து தகவல் வெளியானது. அதன்படி, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை 3.30 மணி அளவில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் பாரதியார் மண்டபத்தில் நடைபெற்றன.

முன்னதாக பொன்முடி அமைச்சர் பதவியை இழந்த போது, அவர் கவனித்து வந்த உயர்க்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் பொன்முடி அமைச்சராகியுள்ளதால், அவர் கவனித்த உயர்க்கல்வித்துறையே மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.