தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் முன், திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியை கைப்பற்றும் சூழலில் விசிக எடுத்த நிலைப்பாடே காரணம் என வலியுறுத்துகிறார். கூடுதல் தொகுதிகள் கோரி கூட்டணியை பலவீனப்படுத்தாமல், இரட்டை இலக்க இடங்களையும் வற்புறுத்தாமல் இருந்தோம்; வேறு முடிவு எடுத்திருந்தால் தமிழக அரசியல் தலைகீழாகியிருக்கும் என அவர் கூறுகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்திருக்கும் நிலையில், நாளை மறுநாள் (மே 4) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவி வருகிறது. கடந்த, ஏப்ரல் 29-ம் தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை, திமுக தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறி வருகின்றன.
அதேபோல, அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஒரு சில கருத்துக் கணிப்புகளும், தவெகவுக்கு ஒரு சில கருத்துக் கணிப்புகளும் சாதகமான முடிவு வர வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தசூழலில் தான், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது திமுக கூட்டணியில் இருந்த அந்த பரபரப்பு மீண்டும் தொற்றிக் கொண்டு இருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் தெரிய வரவிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கிரிஷ் சோடங்கர், கே. பாலகிருஷ்ணன் மற்றும் வைகோ போன்றோர் அடுத்தடுத்து பேசிவரும் கருத்துக்கள் திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை ஈடு செய்யும் வகையில், விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நீர்த்துச் செய்யப்போவதற்காகவா? எனக் கேள்வி எழுந்துள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ”திமுக ஆட்சியை கைப்பற்றப்போகிறது என்று சொன்னால் அதற்கு விசிகவின் அணுகுமுறையும், உறுதியான நிலைப்பாடும் காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. நாம் கூடுதல் இடங்களுக்கு ஆசைப்பட்டிருந்தால், மாற்றம் என்கிற பெயரில் நாம் வேறு முடிவை எடுத்திருந்தால் தமிழ்நாடு அரசியல் தலைகீழாக மாறியிருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதனை நாம் விரும்பவில்லை. தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, நம்மால் இரட்டை இலக்கத்தை எட்ட முடியவில்லை. அதற்கு நான் முரண்டு பிடிக்கவில்லை. இழுபறி நிலையை உருவாக்கவில்லை. கூட்டணியை பலவீனப்படுத்துவற்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்வுவோடு நானே முடிவெடுத்தேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, தொகுதிப்பங்கீட்டின் போதும், விசிகவுக்கு திமுக குறைவான தொகுதிகளே ஒதுக்கியதாக அக்கட்சி தொண்டர்கள் இடையே அதிருப்தி நிலவுவதாக கூறப்பட்டது. எனினும், திருமாவளவன் நாம் போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் விசிகவினர் முழு மூச்சுடனும் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். எனினும், பல இடங்களில் விசிக தொண்டர்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனக் கூறப்பட்டது.
இது குறித்து, அதே காணொளியில் பேசியுள்ள திருமாவளவன், ஒரு சில இடங்களில், விசிகவினர் கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என புகார் வந்திருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒத்துழைக்காதவர்கள் குறித்து தகவல்கள் திரட்டப்படுகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை கடந்த சில நாட்களாக தெரிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உறுதியாக இருந்த திருமாவளவன், திமுக கூட்டணிக்கு ஆதரவான கருத்துக்களை தற்போது பேசியிருப்பது, கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை நீர்த்து செய்வதற்காகவா எனக் கேள்வி எழுந்துள்ளது.