முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை Pt web
தமிழ்நாடு

ஆட்சியில் பங்கு | கலகக்குரலா., உரிமைக்குரலா? பரபரப்பில் திமுக கூட்டணி.!

ஆட்சியில் பங்கு என தீர்க்கமாக சொல்லி வருவதன் மூலம் திமுகவிற்கு நெருக்கடி குடுக்கிறதா காங்கிரஸ் என்ற கோணத்தில் தற்போதைய அரசியல் களம் திரும்பியிருக்கிறது.

PT WEB

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 100 நாட்கள் தான் இருக்கிறது. கடைசி நேர பரபரப்பை தவிர்ப்பதற்காக கூட்டணி பேச்சுவார்த்தையை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் முனைப்பு காட்டப்படுகிறது. கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையில் காங்கிரஸ் தீர்க்கமாக இருக்கிறது. இதனால், காங்கிரஸில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடந்த மாதம் சந்தித்தது.

மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி

அதற்கு காரணம், இந்த தேர்தலில் புது வரவாக வந்திருக்கும் தவெக, ஆட்சியில் பங்கு தருவோம் என்று அறிவித்திருப்பது தான் என்று பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டு ஆட்சியை இழந்த காங்கிரஸ், அதன்பிறகு இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. திமுக, அதிமுக என மாறி.. மாறி.. கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்து வருகிறது. ஆட்சி அமைக்க முடியாத சூழல் இருந்தாலும், இந்த முறை ஆட்சியில் பங்கு என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவே காங்கிரஸ் இருக்கிறது.

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டிருக்கிற வேளையில், பொதுவெளியில் காங்கிரஸ் நிர்வாகிகள் அவர்களின் விருப்பங்களை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வருகின்றனர். தற்போது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது என்று கூறியிருக்கிறார். இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

எம்பி மாணிக்கம் தாகூர்

ஆட்சியில் பங்கு என்ற விருப்பத்தை திமுகவிடம் காங்கிரஸ் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அது பொதுவெளியில் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் நிர்வாகிகள் இதுபோன்று பேசி வருகிறார்களா என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இது காங்கிரஸின் உரிமைக்குரலாக இருந்தாலும், திமுக தரப்பில் இதை கலகக்குரலாகவே பார்ப்பதாக தெரிகிறது. இந்த குரல் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுக்கும் பரவிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தாண்டு கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளதால் தவெகவுடன் கூட்டணி வைத்தால் அந்த இரண்டு மாநிலங்களிலும் இருதரப்பிற்கும் ஆதாயம் இருக்கும் என்ற அடிப்படையிலும் இரு கட்சிகளும் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.