தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 27 இடங்களில் போட்டியிட்ட நிலையில், 1 இடத்தில் மட்டுமே வென்றிருக்கிறது. அதன் வாக்கு சதவீதம் 3 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்திருக்கின்றது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதே பாஜகவின் இச்சரிவிற்கு காரணம் எனப் பரவலாக கூறப்படுகிறது. அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 11.24 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தசூழலில் தான், சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பிறகு, கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என அண்ணாமலை அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்டது. இந்தசூழலில் தான், அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவிருப்பதாகவும், டெல்லியில் நடந்த அமித் ஷா சந்திப்பின் போது பாஜகவில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அவரிடம் அளித்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. எனினும், அது உறுதிப்படுத்தபடவில்லை.
டெல்லியில் என்ன நடந்தது? அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுவிட்டதா? என எதுவும் வெளிவராமல் இருந்து வரும் நிலையில் தான், அண்ணாமலையில் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டிருக்கிறது. தனது பிறந்தாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு அடுத்தப்பதிவிலேயே, நாளை மதியம் 12 மணிக்கு உங்கள் அனைவரையும் சந்தித்து மனம் திறந்து உரையாடவிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தசூழலில் தான், நாளை புதிய கட்சித் தொடங்குவது குறித்தான அறிவிப்பையோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய அறிவிப்பையோ அண்ணாமலை வெளியிடுவார் எனவும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.