சிதைந்த மம்தாவின் இரும்புக் கோட்டை.. ஆட்டத்தைத் தொடங்கும் இடதுசாரிகள்! உச்சகட்ட பயத்தில் பாஜக?
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் கோட்டை தகர்க்கப்பட்டாலும், பாஜகவுக்கு அடுத்த பயம் தொற்றிக் கொண்டுள்ளது. இடதுசாரிகளின் மறுமலர்ச்சி, அக்கட்சியை கவலையடையச் செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலில் பலத்த தோல்வியுற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளில் இருந்தும் விலகி வருகின்றனர். இதனால், திரிணாமுல் காங்கிரஸுக்குள் உட்கட்சிப் பூசல் நிலவுகிறது. இதற்கு உதாரணமாய், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, 58 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இது, மம்தாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், கொஞ்சகொஞ்சமாய் திரிணாமுல் காங்கிரஸ் உடைந்துவருவதும் அவருக்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரத்தில் பாஜகவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யாரும் தாவவில்லை என்றாலும், அக்கட்சியின் பிளவு பாஜகவுக்கு நிறைய மகிழ்ச்சியையே அளித்துள்ளது.
மறுபக்கம் இன்னொரு சவாலையும் அக்கட்சி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை திரிணாமுல் காங்கிரஸ் சிதைவைச் சந்தித்தால், அங்கு ஒரு வெற்றிடம் ஏற்படும் என்பது உண்மை. ஆனால், அந்த வெற்றிடத்தை சிபிஐ(எம்) தலைமையிலான இடது முன்னணி தனியாகவோ அல்லது காங்கிரஸுடன் இணைந்தோ ஒரு கடுமையான சவாலை முன்வைக்கப் பயன்படுத்திக்கொள்ளும் என்பதே பாஜகவின் கவலையாக உள்ளது.
ஒருகாலத்தில், மேற்கு வங்கத்தில் ஆதிக்கம் பெற்ற அரசியல் சக்தியாக விளங்கி, 34 ஆண்டுகளாக மாநிலத்தைத் தடையின்றி ஆட்சி செய்த இடதுசாரி, மம்தாவின் வளர்ச்சிக்குப் பிறகு, அது தனது அனைத்து அரசியல் பிரதிநிதித்துவத்தையும் இழந்தது. இருப்பினும், சமீபகாலமாக இடதுசாரிகளின் மறுமலர்ச்சிக்கான அறிகுறிகள் மாநிலத்தில் வெளிப்படத் தொடங்கியுள்ளன. இது, சமீபத்திய தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. இதைவைத்தே மேற்கு வங்க பாஜகவுக்குள் உள்ள சில பிரிவினர் கவலை கொண்டுள்ளனர்.
இதுகுறித்து இந்தியா டுடே ஊடகத்திடம் பேசியுள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஸ்நிக்தேந்து பட்டாச்சார்யா, “பாஜக நினைத்தால் திரிணாமுல் காங்கிரஸை மிக எளிதாகப் பிளவுபடுத்த முடியும். ஆனால், வங்காளத்தில் உள்ள பாஜக தலைமையின் ஒரு பிரிவினர் திரிணாமுல் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என்று விரும்புவதால், அவர்கள் அவ்வாறு செய்வதைத் தவிர்க்கிறார்கள். பாஜக செய்ததை இடதுசாரிகள் மீண்டும் செய்துவிடுவார்களோ என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்” என்கிறார். அவரது கூற்றுப்படி, பாஜக கடந்தகால தேர்தல்களில் செய்ததுபோல வளர்ந்து வரும் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணியும் திரிணாமுல் காங்கிரஸ் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பி, அதன் வாக்காளர் தளத்தின் கணிசமான பகுதியை ஈர்த்துவிடும் என்று கணிக்கப்படுகிறது. இருப்பினும், பாஜகவை அவ்வளவு எளிதில் இடதுசாரிகளால் வீழ்த்த முடியாது என்றாலும், எதிர்காலத்தில் அதற்கான வியூகங்களை இடதுசாரிகள் வகுக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

