சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் காவல்துறையினர் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காவல்துறையினர் மனிதாபிமானமற்ற முறையில் அஜித்தை தாக்குவது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 28 ஆம் தேதி நகை மாயமான விவகாரம் தொடர்பாக திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார், அவரது சகோதரர் நவீன் உள்ளிட்ட 4 பேர் காவல் துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் அஜித்குமார் என்ற இளைஞரை காவல் துறையினர் கொடூரமாக தாக்கியதில், அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், காவல் துறையினர் தன்னையும், தனது சகோதரரையும் கடுமையாக தாக்கியதாக நவீன் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதில் தொடர்புடைய 6 காவலர்களை கைது செய்ய வேண்டும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் மீது காவலர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்பான வீடியோ வெளியான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அஜித்குமார் மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டநிலையில், அதுதொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிவகங்கை - இளைஞர் அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் விடியோவை அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். சீருடையில் இல்லாத போலீஸார் இளைஞர் அஜித் குமாரை தாக்கியது தொடர்பான வீடியோ நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறையினர் தாக்குவதை வீடியோவாக எடுத்த சக்தீஸ்வரன் என்பவரை இன்று மாலை ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இன்று மாலை 3 மணிக்கு பிரேத பரிசோதனை அறிக்கை, மாஜிஸ்திரேட் அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணைப்பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கை நீர்த்து போக செய்யும் வகையில் மாநில அரசு செயல்பட்டால் கடும் உத்தரவை பிறப்பிப்போம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.