விருத்தாசலத்தில் 1 1/2 வயது குழந்தை மயங்கி விழுந்த போது, காவலர் சரவணன் அதிரடியாக செயல்பட்டு, குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிர் காப்பாற்றினார். இந்த மனிதாபிமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் மற்றும் அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பெரியார் நகரில், உள்ள அபிதா கூல்ட்ரிங்க்ஸ் கடையில், தனது 1 1/2 வயது குழந்தையை வைத்துக்கொண்டு பெண்மணி ஒருவர், டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை திடீரென சரிந்து கீழே விழுந்த நிலையில், மூச்சில்லாமல், சுயநினைவு இழந்தது. அப்போது குழந்தையின் தாய் கத்தி கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது கடைக்குள் வந்த விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சரவணன் என்பவர், சிறிதும் யோசிக்காமல், குழந்தையை தூக்கிக்கொண்டு, சுமார் 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, காமாட்சி தனியார் மருத்துவமனைக்கு ஓடி சென்று, மருத்துவரிடம் காண்பித்துள்ளார்.
உடனடியாக மருத்துவர்கள் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததின்பேரில், குழந்தை மீண்டும் உயிர் பெற்றது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தலைமை காவலர் சரவணன் செயலை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து அறிந்த கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் காவலரை அழைத்து பாராட்டினார்.