இரவில் காரில் தத்தளித்த கர்ப்பிணி.. குடிபோதையில் இருந்த கணவர்.. காவலர் செய்த செயல்! #Viral
மும்பையில் குடிபோதையில் காரை ஓட்டிவந்த கணவரின் மனைவியை காவலர் ஒருவர் மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்ற சம்பவம் வைரலாகி வருகிறது. காவலர், கணவரை காரிலிருந்து இறக்கி, தானே காரை ஓட்டி, கர்ப்பிணி பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்தார். இந்த மனிதாபிமான செயல் நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மகராஷ்டிரா மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளில் குடிபோதையில் காரை ஓட்டிவந்த நபர் ஒருவர், தன்னுடைய கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதாக கூறியுள்ளார். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் செய்த காரியம் தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
குடிப்போதையில் காரை ஓட்டிவந்த கணவர், நான் கொஞ்சம் குடிபோதையில் இருக்கிறேன். என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார், நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுகொண்டிருக்கிறேன். இப்போது இரவு 10.30 மணி ஆகிறது. காவல்துறையினர் எங்களை செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர். நான் உடனடியாக செல்லவேண்டும், இன்னும் 2 கிமீ இங்கிருந்து போகவேண்டும். என் மனைவியின் நிலமையை கொஞ்சம் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதை கேட்ட காவல் அதிகாரி உடனடியாக, கர்ப்பிணியின் கணவரை கீழே இறங்கி சொல்லி, தான் காரை ஓட்டுவதாகவும், நீங்கள் உங்கள் மனைவியுடன் பின்னால் அமருந்து வருமாறும் கூறியுள்ளார். மேலும் அவர் அந்த கர்ப்பிணி பெண்ணிடம், உங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். உங்களைப் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டியது எங்கள் கடமை என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
இந்தசம்பவம் சில தினங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் காவல் அதிகாரியின் செயலுக்கு நெட்டிசன்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், தற்போது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

