ரூ. 4 கோடி விவகாரம் -
ரூ. 4 கோடி விவகாரம் - முகநூல்
தமிழ்நாடு

”பணம் கைமாறியதா? எதுவும் தெரியாது.. CCTV-களை கழட்டி வச்சிட்டாங்க” - பாஜக பிரமுகர் மகன் வாக்குமூலம்!

PT WEB

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய நபரிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணம் கடந்த 6ம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டல் மேலாளர் சதீஷ், நவீன் மற்றும் பெருமாள் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இவ்விகாரத்தில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனனுக்கு சொந்தமான அபிராமபுரத்தில் அமைந்துள்ள கொரியன் ரெஸ்டாரண்டில் வைத்து ஒரு கோடி ரூபாய் கைமாற்றப்பட்டதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில், கடந்த 12ம் தேதி தேர்தல் பறக்க படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் கொரியன் ரெஸ்டாரண்டில் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, விசாரணை தீவிரமடைந்த நிலையில், பாஜக தொழில்துறை மாநிலத்துணை தலைவர் கோவர்தனன் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு கோவர்தனின் மகன் கிஷோர் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அப்போது, அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், கடந்த 28ம் தேதி முதல் தங்களது ரெஸ்டாரண்டில் சிசிடிவி காட்சிகள் வேலை செய்யவில்லை எனவும், டெக்னீசியன் கழட்டி சென்றுவிட்டதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.

மேலும், “நான் வேலை விஷயமாக கடந்த 3ம் தேதியில் இருந்து பஹ்ரைன், ஹாலந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று கடந்த 10ம் தேதி தான் சென்னை திரும்பினேன். இதனால் எங்களது ரெஸ்டாரண்டில் பணம் கைமாற்றப்பட்ட விவகாரம் குறித்து எனக்கும், எனது தந்தைக்கும் தெரியாது” என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி கேமராக்களை கழட்டி சென்ற டெக்னீசியன் தற்போது கன்னியாகுமரியில் இருப்பதாக அவர் கூறிய நிலையில், சுமார் மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணை முழுவதும் வீடியோ பதிவாக தாம்பரம் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, இன்று காலை நெல்லை சென்ற தாம்பரம் போலீசார் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நாகேந்திரனுக்கு வருகிற 22ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அளித்தது குறிப்பிடத்தக்கது.

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கங்கா புர்பாலா அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது. “நாங்குநேரி காவல் நிலையத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ளது. குற்ற வழக்கு இருப்பதால் நைனார் நாகேந்திரனை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.