செய்தியாளர் - M.மீரா
மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக செம்மண் மற்றும் கற்களை வெட்டி எடுத்ததாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள அவரது வீடுகளில் இன்று போலீசார் சோதனை நடத்தினர்.
கடந்த திமுக ஆட்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் பி. மூர்த்தி.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் செயல்பட்டு வந்த செம்மண் மற்றும் கல்குவாரிகளில் விதிமுறைகள் மீறப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமாக செம்மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பி. மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, இன்று மதுரையில் உள்ள முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தியின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, கல்குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள், டெண்டர் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி என்னிடம் எந்த விசாரணையும் நடக்கவில்லை நான் தவுறு ஏதும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.