தனியார் பள்ளிகளில் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் 7-8 மணிநேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆஜரானார். பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 16ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 118 ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்தொடர்ச்சியாக அன்பில் மகேஸுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
விசாரணைக்கு ஆஜரான அன்பில் மகேஸ் இடம் சென்னை காவல்துறையினர் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ், “காவல் துறை சம்மன் அனுப்பியதன் பேரில் விசாரணைக்கு ஆஜரானேன். என்னிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. காவல் துறையினர் என்னிடம் எழுப்பிய 295 கேள்விகளில் 246 கேள்விகளுக்கு பதில் அளித்தேன். 246 கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தேன். அதனை முழுமையாக Print Out எடுத்து கொடுத்து படித்துப் பார்க்க சொன்னார்கள், படிக்கும்போதும் சில இடத்தில் Spelling mistake இருந்ததை சுட்டிக்காட்டினேன். இதனை திருத்திக்கொண்டு என்னிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டனர். அடுத்த வாரம் அழைக்கும்போது பதிலளிக்க காத்திருக்கிறேன்” என கூறினார்.