ஜி.பி.முத்து pt
தமிழ்நாடு

ஜி.பி.முத்து வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... என்ன நடந்தது?

தெரு ஒன்றை காணவில்லை என்று ஜிபி முத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில், அவரது வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட நேர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெனிட்டா ரோஸ்லின்

நடிகர் ஜிபி முத்து தனது ஊரான உடன்குடியில் கீழத்தெருவை காணவில்லை என ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், ஜிபி முத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் என பொதுமக்கள் கூறியிருப்பதால் அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து . இதனையடுத்து, பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் பல்வேறு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றிருந்தார். இந்தநிலையில்தான், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் காணாமல் போன கீழத்தெருவை கண்டுபிடித்து தரக்கோரி நடிகர் ஜிபி முத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றிவை அளித்திருந்தார்.

இந்த கீழத்தெருவானது தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நில அளவீடு செய்து நிலத்தை மீட்டுத்தரக்கோரியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவகம் முன்பு தீக்குளிப்பேன் என்று கூறி ஜிபி முத்து தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவகத்திற்கு வந்து மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், “ தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், காலன் குடியிருப்பு வருவாய் கிராமம், உடன்குடி பெருமாள்புரத்தில் நத்தம் சர்வே எண் 233-இல் கீழ தெரு இருந்தது. அரசுக்குச் சொந்தமான இந்த புறம்போக்கு நிலத்தை பாதையாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் அந்த தெரு சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் காணாமல் போனது போன்று அந்த கீழதெரு காணாமல் போய்விட்டது. அந்த தெரு இருந்த இடத்தை பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு உள்ளது. எனவே, மேற்படி இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

புகார் மனுவை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.பி.முத்து, "கோயிலின் சொத்தை விற்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் , இங்கோ கோயில் சொத்தைத்தான் விற்றிருக்கிறார்கள். அதோடு எனக்கென்று இருக்கும் சொந்தமான பாதையையும் அடைக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட நபர் தன்னுடைய சொந்த பகை காரணமாக அவருடைய குடும்பத்தை சேர்த்துக்கொண்டு அராஜகம் செய்கிறார். ஏனென்று கேட்டால் என்னையும் மிரட்டுகிறார்கள். அடுத்த முறை நான் இங்கு மண்ணெண்ணெய்யோடுதான் வருவேன்" என்று சொல்லி பகீர் கிளப்பினார்.

இதனைத்தொடர்ந்து, ஊர் மக்களையும், கோவில் குறித்தும் ஜி.பி முத்து அவதூறாக பேசியதாக கூறி, ஒன்று சேர்ந்த ஊர் மக்கள் முத்துவின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதனால், ஜி.பி முத்துவின் வீட்டின் முன்பு குலசேகரன்பட்டினம் போலீசார் காவலில் ஈடுபட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோவில் முன்பு குவியத் தொடங்கினர்.

ஒன்று கூடிய ஊர் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஜி.பி முத்து அங்கு வந்ததால், அவருக்கும் ஊர் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒன்று சேர்ந்த கிராம மக்கள், ஜி பி முத்து ஒழிக என்று கோஷம் எழுப்பியதால், பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து போலீஸார் ஜிபி முத்துவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஜிபி முத்து ஈடுபடுவதாகவும், கோவிலை அது இருந்த இடத்தில்தான் புதுப்பித்து கட்டுவதாகவும் தெரிவித்தனர். மேலும், கீழத்தெருவை காணவில்லை என்பது முற்றிலும் பொய் என்றும், கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வதற்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதனால் , ஜிபி முத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனால், அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.