ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் விஜய் மக்கள் சந்திப்பு கூட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இன்று, காலை முதல் போலீசார் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் முத்துசாமி இன்று அதிகாலை முதல் பெருந்துறை விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்தில் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக சற்று முன் அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதனையடுத்து, உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.