police
police  file image
தமிழ்நாடு

கடன் வாங்கிய பணத்தை தொலைத்த பெண்.. மீட்டுக்கொடுத்த காவல் ஆய்வாளருக்கு நெகிழ்ச்சி நன்றி!

யுவபுருஷ்

தஞ்சை பர்மா காலணி இந்திரா நகரில் வசித்து வருபவர் ராஜா. தினசரி வேலைகளுக்கு சென்று வரும் இவரது மனைவி பத்மாவதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு புத்தாடை வாங்க, வட்டிக்கு கடன் பெற்று வந்துள்ளார். அப்போது, தஞ்சை தெற்கலங்கம் சாலைக்கு வந்த போது அவரது பர்ஸ் தவறி கீழே விழுந்துள்ளது. அதில் 10,900 ரூபாய் பணம் இருந்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து தவறவிட்ட பணத்தை மீட்டுத்தருமாறு தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே அருந்தவபுரம், நடுப்பட்டியை சேர்ந்த துரை மாணிக்கம் என்பவர் கீழே கிடந்த பர்ஸை எடுத்து காவல் உதவி மையத்தில் கொடுத்தார். அந்த பர்ஸை ஆய்வு செய்த காவல் ஆய்வாளர் சந்திரா, அது பத்மாவதியின் பர்ஸ் என்பதை உறுதிசெய்தார்.

இதனை அடுத்து புகார் அளித்த பத்மாவதி என்ற பெண்ணை வரவழைத்த காவல் ஆய்வாளர் சந்திரா, பர்ஸை அவரிடம் கொடுத்து பணம் சரியாக உள்ளதா என எண்ணி பார்க்க சொல்லி ஒப்படைத்தார்.

தொலைத்த பணம் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் காவல் ஆய்வாளருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் பத்மாவதி. திடீரென காவல் ஆய்வாளர் சந்திரா காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி கூறி சென்றார் அந்த ஏழை பெண்.

அப்போது, பெண்ணிடம் அறிவுரை கூறிய காவல் ஆய்வாளர் சித்ரா, “கஷ்டப்பட்ட காசு கெடைக்காம போகாது.. அழுகாதம்மா” என்று ஆறுதலாக பேசியுள்ளார். அந்த நேரத்தில் சட்டென மீண்டும் காவல் ஆய்வாளர் சித்ராவின் காலில் விழச்சென்றார் பத்மாவதி.

இதனால், அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் சித்ரா, பத்மாவை தடுத்து, “அதெல்லாம் வேண்டாம், போய் வாருங்கள்” என்று அனுப்பி வைத்தார்.