செய்தியாளர் - பிரசன்ன வெங்கடேஷ்
திருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, காலம் கடந்தாலும் இன்னும் ஒழியாத அவலமாக தொடர்கிறது. இதன் உதாரணமாய் தற்போது மதுரையில் ஒரு மிரளவைக்கும் சம்பவம் காவலர் குடும்பத்தால் கொடூரமாக அரங்கேறி உள்ளது.
தனியார் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான 30 வயது பெண், திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோரின் வரதட்சணை கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கணவர் பூபாலன், மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை செந்தில்குமார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவரும், திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணத்துடன் கூடவே, மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி தர வேண்டும், நகை கூடுதலாக வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் காவலர் பூபாலன் தனது மனைவியை கடுமையாக சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி உள்ளார். மேலும் தன் தங்கையிடம் தன் மனைவியை எவ்வாறு கொடுமைப்படுத்தினேன் என்பதை தொலைபேசி வாயிலாக எடுத்துரைத்திருக்கிறார். இதில் குற்றவாளிகளை எப்படி காவலர்கள் கொடுமையாக கையாளுவார்களோ, அதேபோல் தன் மனைவியை தான் சித்திரவதை செய்ததாகவும் அந்த கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியை, தொடர்ந்து உடலளவிலும் மனதளவிலும் நடந்த சித்திரவதையால், தற்போது மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தலைமை காவலர் பூபாலன், இவரது தகப்பனார் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், காவலரின் தாய் விஜயா மற்றும் தங்கை அனிதா ஆகியோர் மீது நான்கு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் குடும்பத்தினர் தமக்கே வேண்டிய வரதட்சணைக்காக இளம்பெண்ணை சித்திரவதை செய்திருப்பது, சமூக நீதி மற்றும் சட்டத்தின் மீது மக்களுக்கு கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பே திருப்பூர் ரிதன்யா, குமரி மாவட்டம் ஜெபிலா போன்ற பல பெண்கள் வரதட்சணை கொடுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தை உலுக்கிய நிலையில், காவல்துறை குடும்பத்தில் இருந்து இவ்வாறான செயல் வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம், சமூகத்தில் ஒவ்வொரு திருமணத்திலும் பெண்களுக்கு எதிரான பொருளாதார வற்புறுத்தல்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
தன்னுடைய மனைவியை கடும் சித்திரவதை செய்த பிறகு எவ்வாறு சித்தரவதை செய்தேன் என தன் தங்கையிடம் காவலர் பூபாலன் பேசியுள்ளார், அதைக்கேட்டு அவரின் தங்கை சிரித்து மகிழ்ந்துள்ளார். இந்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய மனைவியை அடித்து உதைத்ததை தங்கையிடம் பேசிய காவலர் பூபாலன், “வாயெல்லாம் வீங்கிப்போச்சு, அடிச்சதுல மூஞ்செல்லாம் மாறிப்போச்சு, ஆளே ஒரு மாதிரி ஆயிட்டா. கத்தாதனு வாய பொத்தி பொத்தி, கீறி கீறி அவ வாயே வீங்கிப்போச்சு, தொண்டைய புடிச்சி நெருக்கதுனுல வலிக்குது வலிக்குதுனு சொல்லிட்டு இருக்கா. கால வச்சி லாக் பண்ணதுல முட்டி லாக் ஆகிடுச்சி” என கொடுமை படுத்தியதை சொல்லும் போது, காவலரின் தங்கை அனிதா சிரித்து மகிழ்ச்சியடைகிறார். மேலும் அப்படிலாம் பேசுனா இப்படிதான் நடக்கும்னு சொல்லிவை என்று கூறும் ஆடியோ அதிர்ச்சியளிக்குறது.
காவலர் பூபாலன் தாய் விஜயா உடன் பேசும் ஆடியோவில், ”அவ வீட்டுலலாம் நீ போய் பேசாத, உன் பொண்டாட்டி கிட்டயே கேளு, பின்னாடி போடுறோம் பின்னாடி போடுறோம்னு என்னத்த செஞ்சாங்கனு” என மகன் பூபாலன் இடம் தாய் விஜயா பேசுகிறார். உடன் பேசும் காவலர் பூபாலன், வீடு குறித்து ஹால் பெருசா இருக்கு, பெட்ரூம் தான் சின்னதா இருக்கு என பேசுவதும் ஆடியோவில் இடம்பெற்றுள்ளது. இதன்படி பார்த்தால் மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து வரதட்சணை கொடுமையை நிகழ்த்திருப்பது தெரிகிறது.