கன்னியாகுமரி| 50 பவுன் நகை.. 50 லட்சம் வீடு.. மீண்டும் ஒரு வரதட்சணை கொடூரம்.. புதுப்பெண் உயிரிழப்பு!
செய்தியாளர் - கோகுல்
கன்னியாகுமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியில் இளம்பெண் ஜெபிலா மேரி (26) நேற்று கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து தங்கள் மகளை அடித்து கொலை செய்ததாக கூறி நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
50 பவுன் நகை.. 50 லட்சம் வீடு!
கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பலதா, இவர் மேல்மிடாலம் பகுதியை சேர்ந்த நிதின் ராஜ் என்பவருக்கு செவிலியர் ஆன தனது மகள் ஜெபிலா மேரியை (26) ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். பத்தாண்டுகள் காதலித்து வந்த இளம் ஜோடிகளுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு வரதட்சணையாக 7 லட்சம் ரூபாய் ரொக்க பணமும், 50 சவரன் தங்க நகை, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை மற்றும் இருசக்கர வாகனம், ஐம்பது லட்சம் ரூபாய்க்கு வீடு உட்பட சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் நேற்று மதியம் திடீரென பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் ஜெபிலா இறந்து விட்டதாக மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்துள்ளனர். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது பெண் உயிரிழந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர்.
தற்கொலை என கூறிய மாப்பிள்ளை வீட்டார்..
முதலில் பெண்ணின் கணவன் வீட்டின் தரப்பிலிருந்து ஜெபிலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஜெபிலா உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தங்கள் மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவரிடம் இருந்து 50 சவரன் நகைகளை பெண்ணின் கணவர் நித்தின் ராஜ் மற்றும் அவரது பெற்றோர் மரிய டேவிட் (54), அமலோர்ப மேரி (46) உட்பட கணவன் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அபகரித்து விட்டு பெண்ணை அடித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டினர்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து பெண்ணின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணின் கணவர் நிதின் ராஜ் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உயிரிழந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.