Harish Death Case: Jason Samuel Arrested, Case Changed to Abetment of Suicide Instagram
தமிழ்நாடு

இன்ஃப்ளூயன்சர் ஹரிஷ் மரண வழக்கில் ஜேசன் சாமுவேல் கைது!

ஹரிஷ் மரண வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேலைக் கானத்தூர் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

PT WEB

பிரபல இன்ஃப்ளூயன்சர் ஹரிஷின் மரணம் தொடர்பான வழக்கில், யூடியூபரும் டெக் நிறுவன CEO-வுமான ஜேசன் சாமுவேல் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார். ஹரிஷின் தந்தையின் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டுதல் பிரிவில் வழக்கு மாற்றப்பட்டது.

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

நிதி இன்ஃப்ளூயன்சர் ஹரிஷின் மரணம் தொடர்பான வழக்கில், புதுச்சேரியில் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் யூடியூபரும் டெக் நிறுவன CEO-வுமான ஜேசன் சாமுவேலைக் கானாத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு முதலில் சந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையால் விசாரிக்கப்பட்டது. பின்னர், ஹரிஷின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டுதல் பிரிவின்கீழ் வழக்கு மாற்றிப் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, எக்ஸ் தளப் பதிவில் இந்தக் குற்றச்சாட்டுகளை ஜேசன் சாமுவேல் மறுத்திருந்தார்.

Harish Death Case: Jason Samuel Arrested, Case Changed to Abetment of Suicide

நடந்தது என்ன?

27 வயதான ஹரிஷ், 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் நிதி தொடர்பான வீடியோக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்.

SEBI-யின் பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர் (RIA) உரிமம் ஹரிஷிடம் இல்லை என்றும், சமீபத்தில்தான் AMFI பதிவு எண்ணை (ARN) பெற்றிருந்தும், ஏற்கெனவே AMFI உரிமம் வைத்திருப்பதாக அவர் தவறாகக் கூறினார் என்றும் குற்றம்சாட்டி, ஜேசன் சாமுவேல் ஒரு வீடியோ வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த ஹரிஷின் சமூக வலைத்தளப் பக்கம் மெட்டாவால் முடக்கப்பட்டது. புதிய கணக்கு மூலம் அவர் வீடியோக்களைப் பதிவிடத் தொடங்கினார்; அதுவும் நீக்கப்பட்டது.

இறப்பதற்கு முன், ஹரிஷ் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். "கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் உழைத்த உழைப்பு திருடப்பட்டுவிட்டது" என்று மனரீதியான துன்புறுத்தல், மிரட்டல்களைக் குறிப்பிட்டு அவர் அதில் கூறினார். தன்னை மிரட்டியவர், புதுச்சேரி முதலமைச்சரைத் தனக்குத் தெரியும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

ஹரிஷின் மரணத்தைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும், புதுச்சேரி முதலமைச்சரின் பெயரைக் கூறி ₹3 கோடி கேட்டு மிரட்டியதாகவும் சாமுவேல் மீது ஹரிஷின் தந்தை குற்றம்சாட்டினார். பல ஆண்டுகளாக ஹரிஷ் உருவாக்கிய நற்பெயரை இணையத் துன்புறுத்தல் மூலம் கெடுத்ததாகவும் அவர் கூறினார். மகன் பதிவுசெய்த வீடியோவையும், தொடர்புடைய சமூக ஊடகப் பதிவுகள், செய்திகள், பிற மின்னணு ஆதாரங்களையும் ஆய்வு செய்யுமாறு காவல்துறையைக் கேட்டுக்கொண்டார்.

Harish Death Case: Jason Samuel Arrested, Case Changed to Abetment of Suicide

இதற்குப் பதிலளித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஹரிஷை இணையத்தில் துன்புறுத்தியதாகக் கூறப்படுவதை ஜேசன் சாமுவேல் மறுத்திருந்தார். "நடந்ததை எண்ணி நான் ஆழ்ந்த வருத்தத்திலும், கடும் துயரத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போயிருக்கிறேன்; உயிரிழப்புக்காக வருந்துகிறேன்," என்று அவர் எழுதியிருந்தார். "முறையான SEBI உரிமத்துடன் திரும்பி வந்து இதைச் செய்யுமாறு அந்த வீடியோவிலேயே நான் அவரிடம் கேட்டிருந்தேன். இப்படி ஒரு கடுமையான முடிவு நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவோ எதிர்பார்க்கவோ இல்லை; இந்த இழப்புக்காக வருந்துகிறேன்” என்றும் அவர் சேர்த்திருந்தார்.

தற்போது கானத்தூர் காவல்துறையினர் ஜேசன் சாமுவேலைக் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.