காதலன் ஷாரோனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து, கொலை செய்த வழக்கில், காதலி கிரீஷ்மாவிற்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக கிரீஷ்மா குற்றவாளி என கேரளா நெய்யாற்றின்கரை விசாரணை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தநிலையில், தண்டனை விபரங்களை திங்கள்கிழமை (இன்று) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது தண்டனை விபரங்கள் நீதிபதியால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், காதலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது கேரளா மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்த ஷாரோன் என்ற கல்லூரி மாணவரை கன்னியாகுமரி மாவட்டம் மேல்பாலை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்பவர் காதலித்து வந்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி காதலன் ஷாரோனை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற கிரீஷ்மா குடிக்க கஷாயம் கொடுத்துள்ளார். இதில், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷாரோன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 11-நாள் சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, நடந்த பிரேத பரிசோதனையில் சாரோன் உடலில் அளவுக்கு அதிகமான நச்சு கலந்திருந்ததால் உயிரிழந்ததாக தெரியவந்தது. இந்த நிலையில், பாறசாலை போலீசார் நடத்திய விசாரணையில் காதலி கிரீஸ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கிரீஷ்மா மீது கொலை வழக்கும், உடந்தையாக இருந்ததாக அவரது தாய் சிந்து மற்றும் தாய்மாமன் நிர்மல் குமார் ஆகியோர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றம் உத்தரவு படி 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி கிரீஷ்மாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், 2-மாதத்திற்கு முன்பே ஷாரோனை கொலை செய்ய திட்டமிட்டதும் தொடர்ந்து 10-முறை குளிர்பானத்தில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததும், ஆனால் ஷாரோன் எந்த பாதிப்பின்றி தப்பிய நிலையில் தான் வீட்டிற்கு அழைத்து சென்று கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்தவகையில், கிரீஷ்மாவிற்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதிகள் அவரது தாய் சிந்துவை வழக்கில் இருந்து விடுவித்ததோடு, தாய்மாமன் நிர்மல் குமாருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளனர். தொடர்ந்து தீர்ப்பின் முழு விபரம் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.