பாமக நிறுவனர் ராமதாஸ் pt web
தமிழ்நாடு

“நான் நினைத்திருந்தால் குடியரசுத் தலைவராக கூட ஆகி இருக்கலாம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ஏற்கனவே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கிராமங்களை நோக்கி என்ற பெயரில் பரப்புரையை தொடங்கியுள்ளார்.

PT WEB

பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்த அவர், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.  

மருத்துவர் ராமதாஸ்

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கிராமங்களை நோக்கி என்ற பெயரில் பரப்புரையை தொடங்கியுள்ளார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூனாம்பேடு பகுதியில் அவர் திண்ணை பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராமதாஸ்,  தனது அரசியல் பயணம் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசுகையில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் தன்னிடம் வந்து என்ன வேண்டும் என கேட்டால் தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் இருக்கக்கூடாது என கேட்பதாக கூறினார். மேலும் தனக்கு பதவி என்பது முக்கியம் இல்லை எனக் கூறிய ராமதாஸ், தான் நினைத்திருந்தால் குடியரசுத் தலைவராக கூட ஆகி இருக்கலாம் எனபேசினார்.

கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு 2ஆவது முறையாக அனுப்பிய நோட்டீஸிற்கான காலகெடு நிறைவடைந்த நிலையில், இதுவரை அன்புமணி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இச்சமயத்தில் ராமதாஸ் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருப்பது பாமகவினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.