அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ் முகநூல்
தமிழ்நாடு

’வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து.. தாயை அடிக்க முயன்றார்’ - அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்!

எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி குற்றம் செய்துவிட்டேன். அன்புமணி தான் தவறு செய்தவர். வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து, தவறான ஆட்டத்தை தொடங்கி முதுகில் அடித்தவர் அன்புமணி தான் - ராமதாஸ்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பிரச்னை பூகம்பமாய் கிளம்பியிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார்.

ராமதாஸ் பேசுகையில், ” மன உளைச்சலில் இருப்பதாகக் கூறி அன்புமணி அனுதாபம் தேட முயற்சித்துவருகிறார். கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்துள்ளார். தருமபுரி கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். நானும் பார்த்தேன். நாடும் பார்த்தது. நான் என்ன குற்றம் செய்தேன். ஏன் எனக்கு இந்த பதவி மாற்றம் என சொல்லி இருக்கிறார். இது முழுக்க மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பும் முயற்சியாகும். தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சிக்கிறார். அதற்கான பதிலை சொல்வது எனது கடமையாகும். இனிப்பை தவிர்த்து கசப்பான வார்த்தைகளை கொண்ட மருந்தைதான் பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி குற்றம் செய்துவிட்டேன். அன்புமணி தான் தவறு செய்தவர். வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து, தவறான ஆட்டத்தை தொடங்கி முதுகில் அடித்தவர் அன்புமணி தான். என்ன நடந்தது என ஆதாரத்தோடு ஒளிவு மறைவின்றி இப்போது அப்படியே வெளிப்படுத்துகிறேன்.

பொதுக்குழுவில் என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும். மேடை நாகரீகம், சமூக நாகரிகம் என எதையும் பார்க்காமல் பொது மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டது யார்?. முகுந்தனை இளைஞரணி செயலாளராக நியமித்தேன். முகுந்தனை வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இருக்கதான் நியமித்தேன். உடனே மேடையிலேயே காலை ஆட்டிக் கொண்டு மறுப்பு தெரிவித்தது சரியா?. மைக்கை தூக்கி எனது தலையில் போடாமல் மேஜை மீது வீசியது சரியான செயலா?.

பனையூரில் கட்சி அலுவலகம் திறந்திருக்க்கிறேன் என சொன்னது யார்?. ஆளுயர கண்ணாடியை ஒரு நொடியில் உடைத்தது யார்?. 45 ஆண்டுகால அரசியலில் கட்சிக்கு அவப்பெயரை பெற்று தந்துவிட்டார். கட்சியின் மார்பில் குத்திவிட்டார் அன்புமணி. அதனை கண்டு நான் இடிந்து போய்விட்டேன். கட்சி வளர்ச்சிக்கு தொடர்ந்து இடையூறாக இருந்து பல தவறுகளை செய்து வந்தார்.

ஜி.கே. மணி மகன் தமிழ்குமரனை கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்த விரும்பினேன். அதன்மூலம் கட்சி வளரும் என நினைத்தேன். அதற்கு தடையாக இருந்தார். அவருக்கு நியமன கடிதத்தை கொடுத்து அனுப்பிய சில நிமிடங்களிலேயே அந்த நியமன கடிதத்தை கிழித்து போடு என அன்புமணி கூறினார்.

இதே செயல் தான் முகுந்தனுக்கும் நடந்தது. உங்கள் தாய்யை நீங்கள் கடவுள் என சொல்வீர்கள். பொங்கல் சமயத்தில் முகுந்தன் நியமனம் குறித்து அவரது தாய் கேட்டார்.தாயை அடிக்க முயன்றவர். தனது தாயை பாட்டில் எறிந்து தாக்க முயன்றவர் அன்புமணி. தனது குருவை அவமதித்தவர். இது எல்லாம் ஒரு சேம்பிளாக தான் கூறுகிறேன். அவர் நிறைய தவறுகளைசெய்து இருக்கிறார்.

கட்சியை அரும்பாடுப்பட்டு வளர்த்தேன். கட்சி நிர்வாக குழுவில் ஒருத்தர் பேசினால், அவரை பேசவிடாமல் தடுக்கிறார். உனக்கு தலைவர் பண்பு சிறிதும் இல்லை என அன்புமணியிடம் சொன்னேன். கட்சியின் வளர்ச்சிக்காக தருமபுரி, சேலம் மாவட்டங்களுக்கு நான் சென்றிருந்த போது அங்கு நான் மைக் வைத்து பேச கூடாதுன்னும், 200 பேருக்கு மேல் வர கூடாதுன்னும் சொல்லியிருக்கிறார்.

கட்சியின் நிறுவனருக்கே இந்த நிலை. திருமண மண்டபம் கூடாது. தங்கி இருக்கும் அறையிலேயே கட்சி நிர்வாகிகளை சந்திக்க வேண்டும் என கட்சி நிறுவனருக்கு ஆர்டர் போடுகிறார். யார் உழைத்து வளர்த்த கட்சி. யார் யாருக்கு கட்டளை போடுவது?. கீழ் தரமாக நடத்திய விதம் ஏற்று கொள்ள முடியாது. இதை எல்லாம் பார்த்த நான் நிர்வாக குழு கூட்டதிலேயே தலைமை பண்பு உனக்கு இல்லை என அன்புமணியிடம் நேரடியாக நான் சொன்னேன். தகப்பனிடம் தோற்பது என்பது மானக்கேடு இல்லை. எப்படி இருந்தாலும் கட்சி உங்களிடம் தான் வரும் என்று அன்புமணியிடம் சொன்னேன்.

“பாஜக-தான் வேண்டுமென அழுதார்கள்” :

அதிமுக-வோடு கூட்டணிக்கு போங்கள் என சொன்னேன்; ஆனால் அன்புமணியும் சௌமியாவும் என் கால்களை பிடித்துக் கொண்டு பாஜக-வோடு கூட்டணி வைக்க வேண்டும் என அழுதார்கள்; வேறு வழியின்றி சம்மதித்தேன்

அதிமுக-வோடு சேர்ந்திருந்தால் குறைந்தது மூன்று இடமாவது கிடைத்திருக்கும்; அவர்களும் 6-7 இடங்களுக்கு மேலேவே ஜெயித்திருப்பார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.