அன்புமணி ராமதாஸ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

"நிரந்தரத் தலைவர் அன்புமணி" - கூட்டத்தில் எழுந்த முழக்கம்.. உடனடியாக அன்புமணி ராமதாஸ் கொடுத்த பதில்

பாமகவில் யாரும் நிரந்தர தலைவர் கிடையாது. இது ஒரு ஜனநாயக கட்சி யார் தலைவராக வரவேண்டும் என்பதை பொதுக்குழு தான் தீர்மானிக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: முருகேசன்;

அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்:

சென்னை கானாத்தூரில் உள்ள தனியார் விடுதியில் பாமக தென் மாவட்ட மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் 3 வது நாளாக நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

பாமக பொதுக்குழு

பாமக தலைவர் அன்புமணி பேச்சு:

அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், "கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் பணி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம். இன்றைக்கு அது குறித்து உங்களிடமும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் பொதுக்குழுவை கூட்டி உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க வேண்டும்.

கட்சிக்காக உழைக்கக் கூடிய உண்மையான தொண்டர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்:

மூன்று வாரத்திற்குள் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணி நிறைவடைந்து எனக்கு அனுப்ப வேண்டும். முப்பதாயிரம் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதை விட, கட்சிக்காக உழைக்கக் கூடிய, கட்சியில் உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டத்தில் இருந்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 5 சட்டமன்ற உறுப்பினர்களை நீங்கள் அனுப்ப வேண்டும்.

cm stalin

சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாத அரசுதான் திமுக அரசு:

377 சமுதாயங்கள் சமூக நீதியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையிலேயே எந்த சமுதாயத்திற்கு கிடைக்கிறது கிடைக்கவில்லை என்பதை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் தான் தெரியவரும். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் அதுவும் பாமக இருக்கிற கூட்டணி தான் வெற்றி பெறும் இதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான ஆட்சி அமையும். தென் மாவட்டங்களில் ஒரு பிரச்னை என்றால் மருத்துவர் அய்யா அங்கு ஓடோடி வருவார். இப்போது இருக்கின்ற சின்னச் சின்ன சிறிய பிரச்னைகள் குழப்பங்கள் எல்லாம் சரியாகிவிடும். சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாத அரசுதான் திமுக அரசு.

இங்கு பேசும்போது, சிவா என்பவர் நிரந்தரத் தலைவர் அன்புமணி என்று சொன்னார். இங்கு யாரும் நிரந்தரம் கிடையாது. பாமக ஒரு ஜனநாயக கட்சி. யார் தலைவராக வரவேண்டும் என்பதை பொதுக்குழு தான் தீர்மானிக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி பேசினார்.