அதானி விவகாரம் குறித்த பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில், தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அதானி விவகாரம் தொடர்பாக அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் அதானி சந்தித்ததாக கூறியிருந்தார். இந்த ரகசிய சந்திப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்க வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தியிருந்தார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், ராமதாசின் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அவருக்கு வேறு வேலை இல்லை; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார்.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளிக்க மறுப்பதாகக் கூறி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் முதலமைச்சர் கூறியது தவறு என கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தாண்டி கரூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.