தைலாபுரத்திற்கு திடீர் விசிட் அடித்த அன்புமணி..ராமதாசுடன் சமாதான முயற்சியா? என்ன நடக்கிறது பாமகவில்? முகநூல்
தமிழ்நாடு

தைலாபுரத்திற்கு திடீர் விசிட் அடித்த அன்புமணி..ராமதாசுடன் சமாதான முயற்சியா? என்ன நடக்கிறது பாமகவில்?

விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு அவரது மகன் அன்புமணி திடீரென சென்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

PT WEB

பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் 17ஆம் தேதி தனது தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். இதற்கு போட்டியாக அன்புமணியும் பொதுக்குழுவை கூட்டிய நிலையில், நீதிமன்றம் வரை சென்று அன்புமணி கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழுவை நடத்தினார். அதில், பாமக தலைவராக அன்புமணி மேலும் ஓராண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழு செல்லாது என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், தலைவர் பதவியில் அன்புமணி நீடிக்க உரிமை இல்லை எனவும், தமக்கு தாமே நிர்வாக தலைவர் என்று அறிவித்தது செல்லாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளை (17ஆம் தேதி) பாமக நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழு சட்ட ரீதியாகவும், கட்சி விதிகள் படியும் செல்லாது என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், அன்புமணியின் ஆதரவாளருமான பாலு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ,தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு அன்புமணி திடீரென சென்றுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸின் மனைவியும் தனது தாயாருமான சரஸ்வதியின் பிறந்த நாளையொட்டி, மனைவி சவுமியா, மகன்கள், பேரக்குழந்தைகளுடன் அன்புமணி சென்று அவரை சந்தித்து நேற்று ஆசி பெற்றார். தைலாபுரம் இல்லத்தில் அன்புமணி தந்தை ராமதாசுடன் சமாதான முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ள நிலையில், அன்புமணியின் இந்த வருகை பாமக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.