ஸ்ரீகாந்தி, ராமதாஸ், ஜி.கே.மணி எக்ஸ் தளம்
தமிழ்நாடு

பாமக பொதுக்குழு | மனமுடைந்து மேடையில் அழுத ராமதாஸ்.. ஆறுதல் சொன்ன மகள்!

சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கட்சி பொதுக்குழுவில், புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்குழுவில் ராமதாஸ் விட்டது பெரும் கூடியிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

Prakash J

சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கட்சி பொதுக்குழுவில், புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்குழுவில் ராமதாஸ் விட்டது பெரும் கூடியிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ்-க்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, பாமகவில் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாகவே உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாமக தற்போது இரு தரப்புகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. மேலும், பாமக எங்களிடமே இருக்கிறது என இரு தரப்புமே உரிமை கொண்டாடின. இதற்கிடையே, பா.ம.கவின் தலைவராக அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததைத் தொடர்ந்து ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், பாமக தலைவர் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு முடிவு செய்யும் அதிகாரம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. தலைவர் யார் என்ற விவகாரத்தை சிவில் நீதிமன்றம் விசாரிப்பதே சரியாக இருக்கும் என உத்தரவிட்டு, வழக்கையும் முடித்துவைத்தது.

ஸ்ரீகாந்தி, ராமதாஸ், ஜி.கே.மணி

இந்த நிலையில், உட்கட்சிப்பூசல், 2026 சட்டமன்றத் தேர்தல் ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சித் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில், கட்சியில் இருந்து ஜி.கே.மணியை நீக்குவதாக அறிவித்த அன்புமணிக்கு பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தவிர,‘பசுமைத் தாயகம்’ தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பாமக செயல் தலைவராகவும், பசுமைத் தாயகத்தின் தலைவராகவும் ஸ்ரீகாந்தியை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்குழுவில் பேசிய ராமதாஸ், “ஒரு குழு, கூட்டம், கும்பல், அது நான் வளர்த்த பிள்ளை, பொறுப்பு கொடுத்த பிள்ளை இன்று என்னை தூற்றுகிறார்கள். மிக கேவலமாக பேசுகிறார்கள். நான் அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை. அவர் என்னை மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்துகிறார். நான் அவருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர் என்னை துண்டுதுண்டாக வெட்டி போட்டிருந்தால்கூட நான் போய்ச் சேர்ந்திருப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும் சில்லறை பசங்களை வைத்து என்னை அவமானப்படுத்துகிறார். இந்த பொதுக்குழுவைப் பார்க்கும்போது 95 சதவீத பாமகவினர் என் பின்னால்தான் உள்ளனர். அன்புமணி பக்கம் 5 சதவீதம் பேர்கூட இல்லை. ஆனால், பணத்தை வைத்து அன்புமணி பம்மாத்து காட்டுகிறார். இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற அயராது பாடுபட வேண்டும். மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியை நான் அமைப்பேன். அது மிகப்பெரிய வெற்றியை தரும் என உறுதியாக நம்புகிறேன்" என பேசினார். அன்புமணி குறித்து ராமதாஸ் பேசியபோது திடீரென அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அருகில் இருந்த அவரது மகள் ஸ்ரீகாந்தி அவரது கையைப்பிடித்து தேற்றினார். இதை பார்த்த பாமக தொண்டர்கள் ”அழ வேண்டாம், அழ வேண்டாம்” என கூச்சலிட்டனர்.

இக்குழுவில் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தியும் அன்புமணியைக் கடுமையாக விமர்சித்தார். இப்பொதுக்குழு குறித்து கருத்து தெரிவித்த பா.ம.க. செய்தி தொடர்பாளர் (அன்புமணி தரப்பு) வழக்கறிஞர் பாலு, ”இன்று நடைபெற்றது பாமகவின் பொதுக்குழு அல்ல. இந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் பாமக கட்சியினை கட்டுப்படுத்தாது. எனவே இது பொதுக்குழு அல்ல. ராமதாஸ் தரப்பு வெளியிடும் போலி அறிவிப்புகளை யாரும் பொருட்படுத்த வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.