பாமக நிறுவனர் ராமதாஸ் இதயம் சம்பந்தப்பட்ட பரிசோதனை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு ஏழு மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ராமதாஸை முதலமைச்சர் ஸ்டாலின் நேரிடையாக சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து, 2 நாட்களாக அதே மருத்துவமனையில் சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார்.
இதற்கிடையே அன்புமணி ராமதாஸ் காலையிலேயே மருத்துவமனைக்கு வந்தநிலையில், ராமதாஸின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, “நேற்றைய தினம் மருத்துவர் ராமதாஸ் ஐயா இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை மருத்துவர் ஐயாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் ரத்த குழாய்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பயப்படுவதற்கு எதுவும் இல்லை எனவும் ஐயாவிற்கு எந்த ஒரு பிரச்சனை இல்லை எனவும் இருதய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் இரண்டு நாட்களுக்கு மருத்துவர் ஐயா மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர் அய்யா அவசர சிகிச்சையில் இருப்பதால் இதுவரை நேரில் சந்திக்கவில்லை. அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மருத்துவ அய்யா ஐசியுவில் இருப்பார். பின் பொது வார்டுக்கு மாற்றப்படுவார்” என தெரிவித்தார்.