பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு என பாட்டாளி மக்கள் கட்சி 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. பாமகவில் மொத்தமுள்ள 5 சட்டமன்ற உறுப்பினர்களில் ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோர் ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஷ்வரன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அன்புமணிக்கு ஆதரவாக உள்ள 3 எம்.எல்.ஏக்களை நீக்கி பாமக நிறுவனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 20.07.2025 ல் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து, தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் ஆகிய மூவரும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும், இன்று (12.01.2026) முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் மேற்கண்ட மூவரிடம் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பாமக ராமதாஸ் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ ஜி.கே மணியை கட்சியிலிருந்து நீக்குவதாக அன்புமணி அறிவித்திருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ ஜி.கே மணி, ’என்னை நீக்குவதற்கு ராமதாஸை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.