மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுக அரசை CMC அரசாங்கம் என விமர்சித்தார். திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது என்றும், தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் பேசினார். மேடையில் உள்ள தலைவர்கள் தமிழக எதிர்காலத்தை தீர்மானிப்பர் எனக் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களான டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு பச்சைத் துண்டு, ஏலக்காய் மாலை அணிவித்தும், திருப்பரங்குன்றம் முருகனின் வெள்ளியிலான உருவம் பதித்த நினைவுப் பரிசையும் வழங்கி கௌரவித்தார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள், இத்தேசம் இந்நாளை பராக்கிரமத் திருநாளாக கொண்டாடுகிறது. திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. மேடையில் உள்ள தலைவர்கள் தமிழக எதிர்காலத்தை தீர்மானிப்பர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகிறார்கள், தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த, ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என பேசினார்.
மேலும் திமுக ஆட்சியை விமர்சித்த அவர், திமுக அரசாங்கத்தை CMC அரசாங்கம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் எங்கெங்கும் ஊழல் என்பது குழந்தைக்கும் கூடத் தெரியும் . திமுக ஒரு CMC கவர்ன்மென்ட். திமுக அரசை மக்கள் குற்றம், மாபியா, ஊழல் அரசு என்று கூறுகின்றனர். திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கி வருகிறது.
சில நாட்களுக்கு முன்புதான் நமது முருகப் பெருமானுக்கு விளக்கு போடுவது விவாதப் பொருளாக்கப்பட்ட போது நம்முடைய தலைவர்கள் எல்லாம் பக்தர்களின் அதிகாரங்களுக்கும் உரிமைகளுக்கும் குரல் கொடுத்தார்கள். ஆனால் நண்பர்களே திமுகவும் அவர்களது கூட்டாளிகளும் தங்கள் வாக்கு வங்கிக்காக நீதிமன்றங்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் அவமானப்படுத்தினார்கள் என்று விமர்சித்தார்.
முடிவில் பேசி முடிக்கும்போது, நான் கலாசாரத்தை நேசிக்கிறேன், தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ் கலாசாராத்தின் எதிரி திமுக என விமர்சித்தார்.