கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதிப் குமார் என்பவர் உடன் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் வினோஜ் பி செல்வம் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ”ஒன்றாக படிக்கும்போது தனக்கும் பிரதீப்புக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு, அவர் நல்ல வேலைக்கு வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று வேலை பார்த்தார். எனக்கும் பிரதீப்புக்கும் கடந்த ஏழு வருடங்களாக எவ்வித தொடர்பும் இல்லை. பேஸ்புக்கில் எங்கள் இருவரது புகைப்படங்களும் உள்ளது. அது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டது.
பிரதீப் என்னுடைய பழைய நண்பர் அவ்வளவு தான். திருமணத்திற்கு பிறகு சேலம் சென்றவர் எங்களோடு தொடர்பில் இல்லை. எங்களது நண்பர் ஒருவர் தவறான பாதையில் சென்றது வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் உள்ள புகைப்படத்தை எடுத்து எனது பெயரை இணைப்பது வேடிக்கையாக உள்ளது. முகநூலில் அந்த புகைப்படங்களை நான் அழிக்கவில்லை. எத்தனை வருடங்களுக்கு முன்பு பதியப்பட்டது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.