ஒடிசா | பூரி ஜெகன்நாதர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்... 500க்கும் மேற்பட்டோர் காயம்!
ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இங்கு 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது.
பூரியில் ஜெகன்நாதர் கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது. ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் செல்வார்கள்.
பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை விழா 9 நாட்கள் நடைபெறும். இந்தநிலையில், இந்த ஆண்டு ரத யாத்திரைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது
இப்பணிகள் நிறைவடைந்தநிலையில், நேற்றைய தினம் (27.6.2025) ரத யாத்திரைக்கான பூஜைகள் நடைப்பெற்றது.
இதில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்திருந்தனர். பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரிக்க அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கியதால் காயமடைந்தும், வாந்தி - மயக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டும் 625 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே, கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ரதவோட்டம் நிறுத்தப்பட்டது.
நிறுத்தப்பட்ட ரத யார்த்திரை இன்று காலை மீண்டும் தொடங்குகிறது. தேரின் புனித கயிறுகளைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.