petrol diesel price hike web
தமிழ்நாடு

5வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மக்கள் பெரும் அவதி!

5வது முறையாக பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

Rishan Vengai

அமெரிக்கா–ஈரான் பதற்றம், OPEC நாடுகளின் முடிவுகள், நாணய மாற்று விகிதம் ஆகியவை காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் உயர்கிறது. அரசு நிறுவனங்களுக்கு தினசரி 1,380 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக ஆய்வு கூற, லிட்டருக்கு 25 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய நிலை என எச்சரிக்கை. இதன் விளைவாக 5வது முறையாக விலை உயர்ந்து மக்கள் வாழ்க்கைச் செலவு பெரிதும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது..

petrol diesel price hike

அமெரிக்கா ஈரான் இடையே போர் முடிவை எட்டாததால் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமும், முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.

கடந்த வாரம் 3 ரூபாய் உயர்த்தப்பட்ட போதிலும், அது நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் செலவை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை என்று பொருளாதார வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது. நேமுரா (Nomura) மற்றும் எலாரா கேபிடல் (Elara Capital) நிறுவனங்களின் கூட்டு ஆய்வு அறிக்கையின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை மூலம் இந்திய ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்களுக்கு தினமும் 1,380 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும், இழப்பை சரிகட்ட பெட்ரோல் லிட்டருக்கு 25 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்று கூறியிருந்தது.

petrol diesel price hike

இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு படிப்படியாக உயர்த்திவருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் ரூபாய் 7.50 காசுகள் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது 5வது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.108.01க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 99.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.