விஜய் தலைமையிலான புதிய தவெக அரசின் மீது நம்பிக்கை அதிகரித்ததால், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்கள் பெருமளவில் உயர்ந்துள்ளன. இதனால் தலைமைச் செயலகத்தில் கூட்ட நெரிசல் அதிகரிக்க, நுழைவு வாசலிலேயே மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் பரிசோதனைக்கு பின் மனு போட அனுமதி அளித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த அரசின் மீதான நம்பிக்கையின் விளைவாக புகார் மனுக்கள் அதிக அளவில் குவிந்து வருகிறது. புகார் பெட்டியில் மனுக்களை போட நாள்தோறும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதையொட்டி மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது .
அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் மனுக்களை அளிக்க ஏதுவாக செயலக வாசலிலேயே பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வளாகத்திற்குள் சென்று பொதுமக்கள் மனுக்களை அளித்துவந்த நிலையில் தற்போது புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி தலைமைச் செயலகத்தின் பொதுமக்கள் நுழைவு பகுதியில் காவல் துறையினர் பரிசோதித்து அனுமதிக்க கூடிய இடத்திலேயே பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் தனிப்பிரிவில் அளிக்க விரும்பும் மனுக்களை அந்த பெட்டியில் போட்டுவிட்டு சென்றுவிட வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். பெறப்படும் மனுக்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகளுக்காக பரிசீலனை செய்யப்படும்.
நேரில் மனு அளித்தால் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பி வந்த நிலையில் புதிய நடைமுறை ஏமாற்றம் அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.