\
அரசு ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவுweb

புதுச்சேரி| மதிய உணவுக்காக வீட்டிற்கு செல்லக் கூடாது.. வெளிப்பயணங்களுக்கு தடை! அதிரடி உத்தரவு!

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக வீட்டிற்கு செல்லக் கூடாது, 6 மாதங்களுக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு ஊழியர்களுக்கு விதித்து அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது புதுச்சேரி அரசு.
Published on

எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய வளங்களை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலாளர் முருகேசன், அனைத்து அரசு துறைகள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிலிண்டர் தட்டுப்பாடு
சிலிண்டர் தட்டுப்பாடு

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள எரிபொருள் சிக்கன நடவடிக்கைகள் தொடர்பான அழைப்பைத் தொடர்ந்து மற்றும் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்கள், ஆய்வுப் பயணங்கள் மற்றும் ஆலோசனை பயணங்களை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு வாகனங்களின் பயன்பாட்டை சிக்கனமாக மேற்கொள்வதுடன், எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் வாகன பகிர்வு (Vehicle Pooling) முறையை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அத்தியாவசியமற்ற அதிகாரப்பூர்வ பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், துறைகளுக்கு இடையேயான கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை முடிந்தவரை காணொலி வாயிலாக நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலக பணிகளுக்காக பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றும், அலுவலகங்களில் பயன்பாட்டில் இல்லாத மின்விளக்குகள், ஏர் கண்டிஷனர்கள், கணினிகள் உள்ளிட்ட மின் சாதனங்களை உடனடியாக அணைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Long queues at petrol bunks
Long queues at petrol bunksweb

மேலும், மதிய உணவு நேரங்களில் தேவையின்றி வீட்டிற்கு செல்வதை தவிர்த்து, உணவை அலுவலகத்திற்கே கொண்டு வருமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை அனைத்து துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அலுவலகத் தலைவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சார்பு செயலாளர் எஸ். முருகேசன் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது, மின்சாரத்தை சேமிப்பது மற்றும் அரசின் வளங்களை திறம்பட பயன்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த சிக்கன நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com