பெண் வேடமிட்டு நகை திருட்டு pt
தமிழ்நாடு

ஆவடி| சுடிதார் அணிந்து நகைத் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

கடன் பிரச்சனையை தீர்க்க, சுடிதார் அணிந்து பெண் வேடமிட்டு 60 வயது மூதாட்டியை கத்தியை வைத்து மிரட்டி தாலி செயினை பறித்த 35 வயது கால் டாக்சி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

PT WEB

ஆவடி பகுதியில் பெண் வேடமிட்டு நகை திருடிய மர்ம நபர் வெங்கடேஷ் ராஜா கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

ஆவடி அடுத்த மோரை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (63). இவரது மனைவி செந்தூர்கனி (60). ஜெயபால், அவரது மகன் வெற்றிவேல் என்பவருடன் சேர்ந்து, அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி இரவு, செந்தூர்கனி, வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

அப்போது, சுடிதார் அணிந்து பெண் வேடமிட்டு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், செந்தூர்கனியின் கழுத்தில் கத்தி வைத்து, அவரது கழுத்தில் கிடந்த ஐந்து சவரன் தாலி செயினை பறித்து தப்பினார். மர்ம நபர் கத்தி வைத்து மிரட்டியதில் செந்தூர்கனிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 

இதுகுறித்து விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், பெண் வேடமிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் வெங்கடேஷ் ராஜா (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. 

விசாரணையில், கடன் பிரச்சனையை தீர்க்க, செந்தூர்கனியை வெகுநாள் நோட்டமிட்டு அவர் தனியாக இருப்பதை கண்காணித்து வீட்டில் புகுந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது.

இதனிடையே வெங்கடேஷ் ராஜ் சாலையில் நடந்து சென்று நோட்டமிடுவதும் பின்னர் சுடிதார் அணிந்து பெண் வேடமிட்டு ஜெயபால் வீட்டிற்கு சென்று சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு இரண்டே நிமிடத்தில் மீண்டும் திரும்ப செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்ற சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்துள்ளது காவல்துறை.