கைலாசா ஆசிரமத்தில் அமைச்சர்! வரவேற்ற நித்யானந்தா?வெளியான வீடியோவால் வெடித்த சர்ச்சை!
செய்தியாளர் - பால வெற்றிவேல் , ராஜ்குமார்.ர
இந்தியாவில் பிரபலமான ஆன்மிகவாதிகளில் ஒருவர்தான் நித்யானந்தா. கடந்த 2003-ம் ஆண்டு பெங்களூரு பிடதி பகுதியில் ஆசிரமத்தைத் தொடங்கி நடத்தி வந்தவர். பின்னர், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரி ஏம்பலத்திலும் ஆசிரமங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராகக் காவல்துறையினர் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்குகளின் பின்னணியில், நித்யானந்தா இந்தியாவிலிருந்து தலைமறைவானர். அவரைக் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா அறிவித்தார். தொடர்ந்து, அவர் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே, புதுச்சேரியில் உள்ள நித்யானந்தா தியான பீடத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக நித்யானந்தா வருகை தர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அவர் வரும்போது பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்றும், தியான பீட நிர்வாகிகள் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், நித்யானந்தா புதுச்சேரிக்கு வருவாரா என்ற விவாதமும் எழுந்தது.
இந்தச் சூழலில், ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தா தியான பீடத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸும் பங்கேற்றதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் ஆகியோரை ஆசிரம நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து, வீடியோவில் தோன்றும் நித்யானந்தா இருவரையும் வரவேற்றுப் பேசுகிறார். அப்போது, அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நித்யானந்தாவைக் கையெடுத்துக் கும்பிடுவதும் பதிவாகியுள்ளது.
நித்யானந்தா தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், புதுச்சேரி அரசின் உள்துறை அமைச்சரே அவரது ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுவரை அந்த வீடியோ குறித்து அமைச்சர் சார்பில் எந்தவித மறுப்பும் விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

