பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். போலி நூல்கள் தமிழின் மானத்தை கெடுக்கும் என தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நூலகங்களில் இருந்து இந்நூல்கள் திரும்பப் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் - M.மீரா
கோயம்புத்தூரில் முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு தற்போது முதல்வர் விஜய் திறந்துவைத்த பெரியார் அறிவுலகத்தின் நூல்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகத்திலிருந்து நூலகத்திற்கு அதிக விலையில் புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. அந்தப் புத்தகங்களில் உண்மைக்கு முரணான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதை சிந்தையில் எழுதிய ஒரு கட்டுரை மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் பெருமாள் முருகன்.
இது குறித்து மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தனது X தளத்தில் தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
பாட்டளி மக்கள் தலைவர் அன்புமணியும் இது குறித்து தனது X தளத்தில், பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்! கோவையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்வி, நூலகம் சார்ந்த விஷயங்களிலும், அறிவை வளர்க்கும் நூல்களை வாங்குவதிலும் ஊழல் செய்வதை மன்னிக்கவே முடியாது.
எவராலும் அறியப்படாத ‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட 1,800 புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், நாலடியார் நூல்களை மற்ற பதிப்பகங்கள் ரூ. 350-க்கு விற்கும் நிலையில், ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்னும் முந்நூறு பக்க நூலை ரூ. 1,445 வாங்கியிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதை பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் மறுமொழிந்துள்ளார். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது தான் நூலகங்களின் நோக்கம். அவற்றில் மக்களுக்கு பயனுள்ள, அறிவை வளர்க்கக்கூடிய நூல்கள் தான் இடம்பெற வேண்டும். எவராலும் அறியப்படாத, யாருக்கும் பயன்படாத நூல்களை இதுவரை இல்லாத விலையைக் கொடுத்து வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இதன் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். எனவே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். ஊழலின் பின்னணி குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.