\
writer perumal murugan on the corruption in periyar arivulagam
பெரியார் அறிவுலகம்சிந்தை தளம்

பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்.. பெருமாள் முருகன் குற்றச்சாட்டு.. அமைச்சர் விளக்கம்!

கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்தின் நூல்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
Published on: 

கோயம்புத்தூரில் முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு தற்போது முதல்வர் விஜய் திறந்துவைத்த பெரியார் அறிவுலகத்தின் நூல்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகும் ஒவ்வொன்றும் உள்ளீடற்ற வெற்றுக் கட்டடங்களாகச் சரிந்துபோவதுதான் தமிழ்நாட்டின் பொதுவிதி என்றும் சரிவு தொடங்கி வீழ்ச்சியடையச் சிலகாலம் எடுத்துக்கொள்ளும் என்றும் ஆனால் பெரியார் அறிவுலகத்தின் தொடக்கமே வீழ்ச்சியாக அமைந்துவிடும்போல என்றும் பெருமாள் முருகன் கவலைப்பட்டிருக்கிறார். இதுவரை கேள்வியே பட்டிராத பதிப்பகங்களின் பெயரில் ஆயிரக்கணக்கான நூல்கள் அந்த நூலகத்தில் இடம்பெற்றிருக்கின்றன என்றும் தகவல் பிழைகள் நிரம்பிய அந்தப் புத்தகங்கள் ஏஐயால் உருவாக்கப்பட்டவை என்றும், அந்த நூல்களின் ஆசிரியர்கள் பெயர்கள் போலி என்றும் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

உதாரணத்திற்கு, ’அகல்விளக்கு பதிப்பகம்’ வெளியிட்ட கிட்டத்தட்ட 1,800 நூல்கள் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. ஒருசில தவிர எல்லாம் கெட்டி அட்டை போடப்பட்டவை. நாற்பது ஆண்டு காலமாக இலக்கிய உலகில் புழங்கிவரும் எனக்கு 1800 நூல்களை வெளியிட்டுள்ள ’அகல்விளக்கு பதிப்பகம்’ அறிமுகம் ஆகவில்லை எனவும் அவர் ’சிந்தை’ தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முழு விவரங்களையும் படிக்க: பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்...

மேலும் அவர், “ ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ (ஆசிரியர்: சூர்யா பாலு) என்னும் முந்நூறு பக்க நூலின் விலை ரூ.1445/- மட்டும்தான்! ஒவ்வொரு நூலின் விலையும் இப்படித்தான். இத்தனை விலையுள்ள நூல்கள் பெரும் உழைப்பில் அரிய செய்திகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் என்று கருதி உள்ளே பிரித்துப் பார்த்தால் மேலும் அதிர்ச்சி. ‘நாலடியார், தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவ ஞானி. அத்துடன் உலகம் முழுவதும் அறியப்பட்ட தமிழ் இலக்கியத்தின் தொலைநோக்கிய அணுகுமுறை போன்றவராக வாழ்ந்தவர்’ என்று அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்” எனக் கவலைப்பட்டுள்ள்ளார்.

தொடர்ந்து அவர், ‘போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? யாருக்குப் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறது? இப்படி இன்னும் எத்தனை எத்தனை நூல்கள் விநியோகிப்பட்டிருக்கின்றன’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விசாரணைக் குழு அமைத்து, நடைபெற்ற மோசடிகளை மக்கள் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். புதிய தலைமுறையின் ‘சிந்தை’ தளத்தில் வெளியான இக்கட்டுரைக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன், 'கடந்த ஜனவரி மாதம் பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை உடனடியாக தொடங்கியுள்ளோம். இதில் தவறு செய்தவர்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிவரும் காலங்களில் திறக்கப்பட உள்ள நூலகங்கள் மற்றும் அவற்றுக்காக வாங்கப்பட உள்ள புத்தகங்கள் தொடர்பாக அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தியுள்ளேன்' என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.