பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து, குற்றச்சாட்டுகளை தேர்தல் வழக்கில் விசாரிக்க முடியும் என தீர்ப்பளித்தது.
பெரம்பூர் தொகுதியில், 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, தொகுதி வாக்காளர் தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இன்று விசாரித்தார். முதல்வர் விஜய் தரப்பில், வேட்புமனுவில் அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளதாகவும், எந்த தகவலையும் மறைக்கவில்லை. வேட்புமனுவில் தகவல்களை மறைப்பது வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, குற்ற வழக்கு சம்பந்தப்பட்டது.
விஜய் வசதிபடைத்தவர் என எல்லா வாக்காளருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது, சொத்தை மறைத்ததாகக் கூறி அது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எப்படி கூற முடியும் என வாதிடப்பட்டது.
தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்த வாக்காளர் தினேஷ் தரப்பில், முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கியிருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. வேட்புமனுக்களில் குற்ற வழக்குகளை மறைப்பது எப்படி விதிமீறலோ, அதேபோல சொத்து விவரங்களை மறைப்பதும் விதிமீறல் மட்டுமல்ல ஊழல் நடவடிக்கை.
விவரங்கள் மறைத்தது குறித்து தேர்தல் அதிகாரி முழுமையான விசாரணை நடத்தமுடியாது. தேர்தல் வழக்கில் தான் இதுகுறித்து விரிவாக விசாரிக்க முடியும் என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, முதல்வர் விஜய் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கை நிராகரிக்க கோரி விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, தேர்தல் வழக்கில்தான் மனுதாரரின் குற்றச்சாட்டை விசாரிக்க முடியும் என்று தெரிவித்தார்.