செய்தியாளர்: முத்துக்குமரன்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் தென்பெண்ணை மற்றும் துரிஞ்சல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் சுமார் 2000 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு அடிப்படை வசதிகள் 2 நாட்களாக செய்து தராத நிலையில், பேருராட்சி சார்பில் துர்நாற்றம் அடித்த உணவு பட்டலங்கள் வழங்கியதாக மக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதி மக்கள் 2 நாட்களாக அவதியுற்று வரும் நிலையில், கெட்டுப்போன உணவை வழங்கியதோடு, தண்ணீர் கூட வழங்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக கூறி வேதனையை தெரிவித்த மக்கள், திமுக பேரூராட்சி மன்ற தலைவர் அன்பு மற்றும் திமுக நகர செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
"எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம் எங்களுக்கு யாரும் தேவையில்லை" என ஆக்ரோஷமாக தங்களது வேதனையை கொட்டி தீர்த்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.