பள்ளியிலிருந்து  மாணவர்களை அழைத்துச்  சென்ற பெற்றோர்கள்
பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர்கள் file image
தமிழ்நாடு

"டீ.சி கொடுங்க"- மாணவர்களை அரசுப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள் - என்ன காரணம் தெரியுமா?

PT WEB

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள குமாரபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 22 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த 9-ம் தேதி பெய்த கனமழையின் காரணமாகப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் பள்ளிக்கு அனுப்புவதையும் தவிர்த்துள்ளனர்.

ஆசிரியருடன் வாக்குவதம்

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், "இந்த பள்ளியில் நடு குமாரபுரம் மற்றும் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள்தான் அதிக அளவில் பயின்று வருகின்றனர். பள்ளிக் கட்டடம் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இருந்து வருகிறது. பள்ளிக்குச் சென்று வர போதுமான வசதி இல்லை. மெயின் ரோடு பகுதியில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே பள்ளியை வடக்கு குமராபுரத்திற்கு மாற்ற வேண்டும், அங்கு இருக்கக்கூடிய அரசு புறம்போக்கு நிலையத்தில் புதிய பள்ளி கட்டடம் கட்டித் தர வேண்டும். அதுவரை எங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்றனர்.

இந்தநிலையில் இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டு குழந்தைகளின் கல்வி மாற்றுச் சான்றிதழ் (TC) தர வலியுறுத்தி தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கல்வித்துறை மேல் அதிகாரிகளிடம் கேட்ட பிறகு பள்ளி மாற்றச் சான்றிதழ் வழங்குவதாகத் தலைமை ஆசிரியர் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் எனக் கூறி பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.