கிராம மக்கள் pt desk
தமிழ்நாடு

600ஆவது நாளில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்... மனதை உலுக்கும் காட்சிகள்!

பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய விளை நிலங்களில் இறங்கி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

webteam

செய்தியாளர்: இஸ்மாயில்

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டினம் உட்பட மொத்தம் 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளது. இந்த விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் இரவு நேரங்களில் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம், பேரணி, சாலைமறியல் என பல்வேறு வகையில் தங்கள் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

கிராம மக்கள்

இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சிறப்பு தனி நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இதற்கான அறிவிப்பு ஒவ்வொரு கிராமமாக வெளியிடப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று 600 வது நாள் நிகழ்வில் ஏகனாபுரம் பகுதியில் உள்ள அம்மன் திருக்கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்ற கிராம மக்கள், தங்களது விளை நிலங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.

இதனால் இப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் முதலுதவி சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து விவசாய நிலங்களை நெருங்கிய போராட்டக் குழுவினர் மத்திய மாநில அரசுக்கு எதிரான கண்டனங்களை எழுப்பியும் கதறி ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், இன்று முதல் இரவு நேர போராட்டத்தை நிறுத்திக் கொண்டு சட்டப் போராட்டத்தை தொடங்க உள்ளதாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தெரிவித்தார். இம்மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.