
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 300ஆவது நாளை எட்டியுள்ளது. இதில் ஏகனாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் ஏரி நீரில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்.
சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயில் 4750 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இந்த விமான நிலையம் அமைக்க பரந்தூர், கொளத்தூர், ஏகனாபுரம் உள்பட 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இங்குள்ள தனியார் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தி அந்த விமான நிலையம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமையும் இடத்தில் ஏரி குளங்கள், நீர்நிலைகள், விளை நிலங்கள் உள்ளன.
நீர்நிலைகளை அழித்தும், விளை நிலங்களை எடுத்தும் விமான நிலையம் அமைக்க அக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கிராமத்தில் இன்று 300 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரி நீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த கிராமத்தில் போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கிராமத்துக்குள் நுழையும் சாலைகளில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின் அவர்கள் மக்களை ஏரியில் இறங்கவிடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் ஏற்கெனவே 6 முறை நடைபெற்ற சேவை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.